Monday, September 19, 2011

மூன்று முத்துக்கள் - தொடர் பதிவு


நண்பர் மாதவனின் விருப்பத்திக்கு இணங்க இதோ எனக்கு பிடித்த பிடிக்காத, புரியாத...மூன்று விஷயங்கள்.

1) விரும்பும் மூன்று விஷயங்கள்...

# உலகத்தில் எங்கிருந்தாலும் பிறந்த மண்ணை (தஞ்சையை) .
# விடுமுறை நாட்களில் மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போடுவது.
# வெள்ளை வேட்டி, வெள்ளை (காதர்/காதி) சட்டை அணிவது. 

2) விரும்பாத மூன்று விஷயங்கள்...

# அடுத்தவர்களை காக்க வைப்பதும், அடுத்தவர்களுக்காக காத்து நிற்பதும்.
#  விடியற்காலையில் எழுந்திருப்பது.
# ஜாதி மத அடிப்படையில் மனிதர்களை எடைபோடுவது

3) பயப்படும் மூன்று விஷயங்கள்...
# எனது மனைவிக்கு என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?
# ரோலர் கோஸ்டர்/த்ரில்லர் ரைடுகள்.
# இந்தியாவில் இரவில் கார் ஓட்டுவது.

4) புரியாத மூன்று விஷயங்கள் (இதுவரை)...

# How people invented major inventions like electricity, telephone and sattilites?
# தலை முதல் கால் வரை தானே இயங்கும் மனித எந்திரம்
# எப்படி இட்லி வடை போன்ற சைட்டுகளுக்கு மட்டும் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் ஹிட்டுகள் கிடைக்கின்றன என்று...

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்...

# அலுவலகம், வீடு இரண்டிலும் லாப் டாப்புகள்.
# குப்பைகள் (பிரிண்ட் அவுட், மற்ற காகிதங்கள்)
# குழந்தைகள் போட்டோக்கள்.


மற்ற முத்துக்கள் தொடரும்...



share on:facebook

Friday, September 16, 2011

இலவச ராட்டி மற்றும் ஊதுகுழல் - தமிழக அரசு பரிசீலனை.


தமிழகத்தில் வாழும் ஏழை மக்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள இனி கேஸ் இல்லாத எல்லா குடும்பத்திற்கும் இலவச சாணி விராட்டிகளும், ஆடுப்பு ஊத எவர்சில்வர் ஊது குழல்களும் தமிழக  தாய்மார்களுக்கு அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக முதல்வர்  அறிவிப்பு.    

அட, என்னங்கையா பொழப்பு இது. இன்று பத்திரிகைகளில் பார்த்தால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் தங்கள் தோள்களில் மாட்டிக்கொண்டு  செல்லும் பைகளில் தமிழக முதல்வர் சிரித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த தேர்தல் வரும் போது எதிர் கட்சியினர் இம்மாதிரி ஒரு கட்சி தலைவரின் படம் போட்ட பைகளை மாணவர்கள்  எடுத்து செல்லக்கூடாது அது தேர்தல் விதிமுறைகளுக்கு  எதிரானது  என வழக்கு போட்டால் என்ன செய்வது? இல்லை இதே போல்  எல்லா  இலவசங்களிலும் முதல்வர் படங்களை போடுவார்களா? பல  ஆண்டுகளுக்கு  முன் இலவச காலணிகளை வழங்கினார்கள். அப்போது  இம்மாதிரி முதல்வர்  படத்தை காலனியில் போட முடியுமா?  

எது எது தான் இலவசமாக கொடுக்க வேண்டும் என விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. கட்சிகாரர்கள் எல்லோரும் காசு பார்க்க வேண்டும். அதற்க்கு எதாவது ஒன்றை (இலவசமாக) அறிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

மாட்டையும் ஆட்டையும் இலவசமாக கொடுக்கிறார்களாம். காளை மாட்டியா? ஆண் ஆட்டையா? அப்படியே கொடுத்தாலும்  ஒவ்வொரு மாட்டிற்கும் எப்படி விலை நிர்னைப்பார்கள்? ஒரு லிட்டர் கறக்கும் மாட்டை ஆயிரம் ரூபாவிற்கு வாங்கி விட்டு அது ஒன்பது லிட்டர் கறக்கும் மாடு என ஒன்பது ஆயிரத்திற்கு கணக்கு காட்ட மாட்டார்களா கட்சிக்காரர்களும் அமைச்சர்களும்?

ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமானால், அவர்கள் கல்விக்கடனுக்காக வரும்போது சொத்து மதிப்பு கேக்காமல் வட்டி இல்லா  கடன் கொடுங்கள். ஆடு மாடு வாங்க நீண்ட கால கடன் கொடுங்கள். அதை விட்டு விட்டு இலவசம் இலவசம் என்று மக்கள் பணத்தையே எடுத்து அதில் சம்திங் பார்த்து விட்டு மிச்ச சொச்சங்களை மக்களுக்கு கொடுத்து விட்டு மறுபுறம் காஸ் விலை, பெட்ட்ரோல் விலை என எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு அதனால் பால் விலையிலிருந்து பாகற்காய் வரை விலை உயர்ந்துள்ளது.

இப்படியே போனால் இனி தமிழக மக்களின் தரம் உயர, அவர்கள் உடல்  நலம் காக்க இலவச கொசுவர்த்தியும், இரவு நேரத்தில் மின்சார நிறுத்தம் போது  விளக்கு ஏற்ற இலவச தீப்பெட்டியும் வழங்க திட்டம் அறிவித்தாலும் அறிவிப்பார்கள்.   

share on:facebook

Thursday, September 15, 2011

பேரறிஞர் அண்ணாவும் நானும்

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகள் பற்றி மாற்றுக்கருத்து உடையவர்கள் கூட அவரின் நேர்மையையும், அறிவையையும், நல்லாட்சியையும் பற்றி குறை கூற மாட்டார்கள்.

இன்று அண்ணா அவர்களின் பிறந்த நாள். ஆண் லைன் செய்தி பத்திரிக்கைகளில் எங்கும் அதை பற்றிய குறிப்போ/செய்தியோ (குறைந்த பட்சம் முதல் பக்கத்தில்) இல்லை. அதை நிவர்த்தி செய்யும் பட்சத்தில் நான் வரைந்த அண்ணாவின் ஓவியத்தை இங்கு பிரசரித்துள்ளேன்.

உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போட்டோ/பின்னூட்டம் மூலமாக சொலுங்களேன்.

வாழ்க அண்ணா நாமம்...




share on:facebook

Wednesday, September 14, 2011

சுனாமியின் சுயரூபம். கார் கேமராவில் பதிவான நேரடி காட்சிகள்.



நன்றி: youtube 

share on:facebook

Monday, September 12, 2011

கவாஸ்கர் சதமும் ரேடியோ மனிதர்களும் - நினைவலைகள்


"அதோ பந்து மேல் நோக்கி வேகமாக பறந்து வருகிறது...", "கவாஸ்கர் மட்டையை தூக்கிக்கொண்டு ஓரடி முன்னே வந்து..., இதோ வேகமாக அடிக்கப்பட்ட பந்து பவுண்டரியை தாண்டி போய் விழுகிறது"

சிறுவயதாக இருக்கும் போது இப்படிதான் சிறிய வானொலிப்பொட்டி  முன் அமர்ந்து கொண்டு தமிழ் கிரிக்கெட் கமெண்ட்ரிக்களை நண்பர்களுடன்  கேட்டு  ரசித்ததுண்டு. அப்போதெல்லாம் இப்போது போல் வருடம் முழுவதும்  போட்டிகள்  இருக்காது. அவ்வப்போது சென்னையில் போட்டிகள்   நடக்கும் போது இவ்வாறு தமிழில் வர்ணனை இருக்கும். அதை மட்டும் தான் கேட்டு ரசித்து, கவாஸ்கர் சிக்ஸர் அடிக்கும் போதும், அவ்வப்போது செஞ்சுரிகள் விழும் போதும் கைதட்டி கொண்டாடியதுண்டு.

அப்போது எங்கள் தெருவில் ஒருவர் வீட்டில் மட்டும் தான் ரேடியோ இருந்தது. அந்த சிறிய ரேடியோவில் கீழே வரிசையாக நாலைந்து நபர்கள் ஏதோ இசை உபகரணங்களை வாசிப்பது போல் சிறிய சிறிய ஸ்டிக்கர்கள்  ஒட்டப்பட்டிருக்கும். நான்  சிறு வயதாக இருக்கும் போது ரேடியோவிலிருந்து  வரும் பாட்டும் இசையும் ஸ்டிக்கரில் தெரியும் மனிதர்கள் தான் (ரேடியோவின்) உள்ளே இருந்து வாசிக்கிறார்கள் என நம்பியதுண்டு(நான் ரொம்ப அப்பிரானியாக்கும்). அதே போல் திரைப்படங்களில் வரும் காட்சிகள் அனைத்தும் திரைக்கு உள்ளே இருந்து கொண்டு நடிக்கும் நடிகர் நடிகைகளின் காட்சிதான் வெளியே திரையில்  தெரிகிறது எனவும் நான் நம்பியதுண்டு(இப்ப தெரியுதா என் பெயர் ஏன் ஆதிமனிதன் என்று!?) அல்லது யாரோ எனக்கு தவறாக சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் போலும்.

அதன் பிறகு பள்ளி கல்வி வரை கிரிக்கெட் விளையாடியதுண்டு. பிறகு  கிரிக்கெட் என்றால் பிடிக்காமல் மட்டும் போகவில்லை. அதன் மேல் ஒரு வெறுப்பே வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம், அப்போதெல்லாம் கிரிக்கெட் பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆங்கில புலமையை காட்டுவதற்காக ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். அது ஒரு வெறுப்பு (இத்தனைக்கும் நான் ஆங்கில வழி கல்வி பயின்றவன்). அப்புறம் வருடம் முழுவதும் விளையாண்டால் அதை எப்படி ரசிக்க முடியும். பிரியாணி என்பதற்காக அதையே நாள் முழுவதும் உன்ன முடியுமா?

ரேடியோ பற்றி சொல்லும்போது இதையும் சொல்ல வேண்டும். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. ஓரளவு வசதி இருந்தும் ஏனோ எங்கள் பெற்றோர்கள் சற்று வறட்சியை காட்டியே வளர்த்தார்கள் (அதனால் தான் நாங்கள் எல்லாம் உருப்புட்டோம் என்பது வேறு கதை). அவ்வப்போது எங்கள் தந்தை ரேடியோ வாங்க போகலாம் என்று தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே இருந்த(அப்போது இருந்த ஒரே எலெக்ட்ராணிக்ஸ்) கடைக்கு அழைத்து  செல்வார். நாங்கள் ரேடியோ வாங்க வந்தவர்கள் ஆதலால் எல்லா ரேடியோவையும் எடுத்து ஆன் செய்து, திருகி, பாட்டு கேட்டு கடைசியில் வாங்காமலேயே திரும்பி வந்து விடுவோம். அந்த சந்தோசத்தை இப்போது நினைத்தாலும் பசுமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. கடைசியாக எங்கள் வீட்டிலும் ஒரு ரேடியோவை வாங்கினோம்.

இப்போது, பத்து வயது கூட நிரம்பாத என் இளைய மகள் தனக்கு ஐ-பாடு வேண்டும் என கேட்கிறாள்.

சுனில் கவாஸ்கர் பிறந்தவுடன் மருத்துவமனையிலே  பெட் மாறிவிட்டார். அதாவது, அவரை செவிலியர்கள் வேறொரு தாயிடம் (மீனவ குடும்பத்தை  சேர்ந்த)  கொடுத்து விட்டார்கள். பிறகு பிறவியிலேயே அவருக்கு இருந்த ஒரு உடல் அடையாளத்தை வைத்துதான் குழந்தை மாறிப்போன  விஷயம் தெரிந்து அவரை  மீண்டும் அவரின் தாயாரிடம் சேர்த்ததாக நான் கேள்விப்பட்டதுண்டு. நிஜமா நண்பர்களே?


share on:facebook

Thursday, September 8, 2011

தடுக்கி விழுந்த பெண்ணை தூக்கி விட்ட பாவம் - அமெரிக்க அனுபவம்.


சமீபத்தில் அமெரிக்காவில் நான் பார்த்த இரு (சிறு) அசம்பாவித  சம்பவங்களும் அந்த நேரத்தில் இந்தியனாக என்னுடைய எதிர்வினையும்  அந்த எதிர்வினைக்கு சற்றும் எதிர்பாராத  மறுவினையும் என்னை சிறிது சிந்திக்க வைத்தது.

சம்பவம் # 1: 
நாங்கள் SFO எனப்படும் சான் பிரான்சிஸ்கோ சுற்றுலா சென்றிருந்த சமயம்  அங்குள்ள கோல்டன் கேட் எனப்படும்   கலிபோர்னியாவின் புகழ் பெற்ற பாலத்தை தரையில் இருந்து சுற்றிப்பார்க்க அங்கிருந்த பார்கிங் ஏரியாவில் எங்கள் வண்டியை நிறுத்திவிட்டு எல்லோரும்  கிளம்பினோம். அப்போது சுமார் 10 அடி தூரத்தில் என் கண்  எதிரே ஒரு பெண் கனமான  புல்லட்  வண்டி ஒன்றை ஸ்டாண்ட் போட  முயற்சிக்க, அது எதிர்பாரத  விதமாக  அப்பெண்ணின் மீதே சாய, வண்டி தன மீது விழாமல் தவிர்க்க அப்பெண்  நகர முயற்சிக்கையில்  கீழே விழுந்து விட்டார். 

இதை கண்டவுடன் நான் ஓடிச்சென்று அப்பெண்ணை தூக்க கைகொடுக்க, அப்பெண் சிரமப்பட்டு ஒரு வழியாக எழுந்தார். ஆனால்  எதற்கு  எடுத்தாலும் நன்றி சொல்லும் அமெரிக்காவில் அப்பெண் எனக்கு "நன்றி" சொல்லாததிலிருந்தே எனக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியது. அதே நேரம் அப்பெண்ணின் கணவனும் தன் வண்டியை நிறுத்திவிட்டு ஓடி வந்து விழுந்து கிடந்த வண்டியை தூக்க முயல, மீண்டும் நான் வண்டியை தூக்க வண்டிக்கு கை கொடுக்க நினைத்த போது தான் எனக்கு அந்த கேள்வியை கேக்க வேண்டும் போல் இருந்தது "May I hep you "?. அவர்  சற்றே யோசித்து விட்டு "Yeah...would be great" என கூறினார்.

சம்பவம் # 2:
நேற்று என் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்புகையில், எங்கள் காருக்கு செல்லும் வழியில் உள்ள 4 way crossing இல் ஒரு முதியவர் கடக்க முயற்சிக்க தடாலென்று நடு ரோட்டில் விழுந்து விட்டார். உடனே நாற்புறமும் வந்த கார்கள் அனைத்தும் ஸ்டாப் சைன் அருகே நின்று விட்டது. அருகில் வந்த இரண்டு கார்களில் இருந்தும் ஆட்கள் வெளியில் இறங்கி வந்து விட்டார்கள். நானும் ஓடிச்சென்று அந்த முதியவரை தூக்கலாம் என நினைக்கும் போதுதான் நினைவுக்கு வந்தது மற்றவர்கள் எல்லோரும் அந்த  முதியவருக்கு அருகே சென்று பார்த்தார்கள் ஒழிய யாரும் உடனடியாக அவரை தூக்க முயற்சிக்கவில்லை.

இந்த தடவை நான் அமைதியாக என்ன நடக்கிறதென்று கவனிக்க ஆரம்பித்தேன். சில நிமிடங்கள் கழித்து ஒருவர்  முதியவர் அருகே சென்று, Are you Ok ? என  கேட்டார். முதியவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. ஆனால் அவர் நினைவுடனும் அசைந்து கொண்டும் இருந்தார். பிறகு பக்கத்தில் உள்ளவர்களை பார்த்து அருகில் இருந்தவர், ரோட்டில் விழுந்து கிடப்பதால் முதியவரை தூக்கி ஓரமாக நடை பாதையில் கிடத்தலாமா என கேக்க, அதை எல்லோரும் ஒப்புக்கொண்டனர். அதே நேரம் இன்னொருவர்  911 (அவசர உதவி) கால் பண்ண, முதியவரை  நடைபாதையில் கிடத்திய பின், ஒருவர் நீங்கள் சுகர் பேஷன்டா என  கேட்டார். அவர் இல்லை என்றதும், தண்ணீர் குடிக்கீறீர்களா என கேட்டார். அவர் வேண்டாம் என்றதும் விட்டு விட்டார். இன்னொருவர் அவர் போதையில் இல்லை என மற்றவர்களிடம் தெரிவித்தார். மற்றபடி முதியவர் கீழே விழுந்ததில் நெற்றியில் அடிபட்டு சிறிது ரத்தம் வழிந்தபடி இருந்தாலும், நடை  பாதையில் கிடத்தப்பட்டு அப்படியே கிடந்தார். நாங்கள் அனைவரும் அவரை சுற்றி நின்ற படி.

அதே நேரம், ஒரிரு நிமிடங்களில் 911 (அதாவது, பெரிய தீனைப்பு வண்டி,  சிறிய மீட்பு வண்டி , ஒரு பாரா மெடிக்கல் வண்டி என மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக) வந்து நின்றது. அவர்களும் அவரை தூக்கவேயில்லை. படுத்துகிடந்தபடியே அவரிடம் கேள்விகள் கேட்டனர். நாடி மற்றும் பிரஷர்  பார்த்தனர். அவர் முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டனர். பொதுவாக இம்மாதிரி தருணங்களில் பொது மக்கள் நின்று நடக்கும்  சம்பவங்களை வேடிக்கை பார்க்க கூடாது என்பதனாலும், முதியவருக்கு  உரிய உதவி வந்து சேர்ந்து விட்டதினாலும் நாங்கள் அவ்விடத்தை விட்டு  கிளம்பிவிட்டோம். 

இதையெல்லாம் பார்த்த பிறகு அமெரிக்க நண்பர் ஒருவரிடம் அவசர  நேரத்தில் அமெரிக்க நீதி என்னவென்று கேட்டபோது அவர் கூறியது:

# என்னதான் அவசர  கால உதவி என்றாலும், சம்பந்தப்பட்டவரை கேக்காமல்/அனுமதியில்லாமல் உதவிக்கு முனையாதீர்கள்.

# அறிமுகம் இல்லாதவர்கள் உரிமையுடன் தொடுவது என்பது  அமெரிக்கர்களுக்கு பிடிக்காத விஷயம் (அது ஆபத்து சமயம் என்றாலும்).

# பல நேரங்களில் கீழே விழுந்தால் கூட தாங்களே எழுந்து நிற்க தான் அமெரிக்கர்கள் விரும்புவார்களே ஒழிய அடுத்தவர்களின் உதவியை எதிர் பார்க்க மாட்டார்கள்.

# மற்ற படி  ஆபத்திற்கு பாவமில்லை என்பது அமெரிக்காவிலும் பொருந்தும்(Good Samaritan Law).

share on:facebook

Tuesday, September 6, 2011

டில்லி ஐகோர்ட் வாசலில் குண்டு வெடிப்பு; 9 பேர் பலி; பலர் காயம்


புதுடில்லி: டில்லி ஐகோர்ட் 5-வது கேட் அருகே இன்று காலை 10: 17 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானதாகவும் 30 பேர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் பலர் காயம் அடைந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.


டில்லி ஐகோர்ட் அருகே இன்று காலை கோர்ட் பணிக்கு வந்த ஊழியர் ஒருவர் ஐகோர்ட் 5-வது கேட் அருகே பயங்கர சத்தத்துடன குண்டு வெடித்ததாக தெரிவித்தார். இதைத் தொடர்‌ந்து சம்பவ இடத்தில் குண்டு வெடித்ததற்கான தடயம் இருந்தது. ஆம்புலனஸ்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களை சப்தர்ஜங், ராம் மனோகர் லோகியா ஆகிய மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.

உள்துறை அமைச்சகம் நிலைமை குறித்து விவாதித்து வருகிறது. டில்லி போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஒரு பிரீப்கேசில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

தேசிய பாதுகாப்புப்படையினர் (என்.எஸ்.ஜி), தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து வருகின்றனர்.

பார்லிமென்டில் கண்டனம்: குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பார்லிமென்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டு வெடிப்பு எதிரொலியாக ராஜ்யசபா 2 மணி வரையும், லோக்சபா 12.30 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வளையத்தில் டில்லி: குண்டுவெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து டில்லி ஐகோர்ட் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லி முழுவதையும்போலீசார் தீவிர பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவந்துள்ளனர்.

2-வது முறை: கடந்த 4 மாதங்களில் டில்லி ஐகோர்டில் நடந்த 2-வது குண்டுவெடிப்பு என போலீசார் தெரிவிக்கி்ன்றனர். கடந்த மே மாதம் 25-ம் தேதி இதே போன்று டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடித்தது குறிப்பிடத்தக்கது

நன்றி : dinamalar.com  

share on:facebook