Tuesday, January 10, 2012

IT அவஸ்தையா ஆனந்தமா ?

கீழே உள்ள காணொளியை ரசித்து விட்டு!? சொல்லுங்கள். IT துறையில் வேலை பார்ப்பது அவஸ்தையா அல்லது ஆனந்தமா என்று? அப்படியே முடிந்தால் பக்கத்தில் உள்ள ஓட்டுப் பெட்டியில் உங்கள் ஓட்டுக்களை போடுங்கள். இலவசமெல்லாம்  ஒன்றும் கிடையாது.     



நன்றி: youtube  

share on:facebook

Monday, January 9, 2012

"ஜெயிப்பது சுகம்" சுய சரிதை-1: காமர்ஸ் படித்தால் வெற்றி அடைய முடியாதா?


இந்த பதிவை அடுத்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை தொடராக நினைத்து எல்லாம் நான் எழுதவில்லை. நம்பிக்கை தொடர்கள்/புத்தகங்கள் படித்து மட்டும் ஒருவர் முன்னேறி விட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதற்க்கு காரணம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சந்திக்கும்  சவால்களும் வெற்றி பாதைகளும் வெவ்வேறாக இருப்பது தான். அதே நேரம் நம்பிக்கை பற்றியும், நம்மை தேடி வரும் சந்தர்ப்பங்களை எப்படி நமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் என்னுடைய அனுபவங்கள் மற்றும் என் நண்பர்கள், சுற்றத்தாரின் அனுபவங்களை இந்த தொடரின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்.

பத்தாவது வகுப்பு பொது தேர்வு அட்டவணை அறிவித்துள்ள இந்த நேரத்தில், பத்தாவது வெற்றிகரமாக முடித்து பிளஸ் 1 செல்லும் நேரத்தில் மாணவர்களிடையே எழும் மிக பெரிய குழப்பமும் தடுமாற்றமும் எந்த குரூப் தேர்வு செய்ய வேண்டும் என்பதே. இப்போது மாணவர்கள் எல்லாம் மிகவும் தெளிவாக உள்ளார்கள். எந்த குரூப் எடுத்தால் என்ன ஆகலாம் வேலைவாய்ப்பு எப்படி என்று நம்மை விட அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் இந்த குரூப் தேர்வு செய்வதில் பெற்றோர்கள் பங்கும் நிறையவே உள்ளது.

நான் பத்தாவது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இருந்தாலும் எனக்கு காமர்ஸ் குரூப் தான் படிக்க வேண்டும் என்று விருப்பம். காமர்ஸ் க்ரூப் எடுத்து அக்கவுன்ட்டன்சி படித்து பின்னாளில் CA ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. இதை நான் என் பெற்றோர்களிடம் தெரிவித்த போது, என்னுடைய நியாயமான ஆசைக்கு அவர்கள் குறுக்கே நிற்கவில்லை.

சின்ன வயதில் இருந்தே என் தந்தை எனக்கு நிறைய சுதந்திரமும், எனக்கு நானே செய்துகொள்ள முடியும் காரியங்களை என்னிடமே விட்டு விடுவார். அப்போது தஞ்சை மாவட்டத்திலேயே ஒரே ஒரு பள்ளியில் மட்டும் தான் காமர்ஸ் க்ரூப் இங்கிலீஷ் மீடியம் இருந்தது. நான் ஆங்கில மீடியத்தில் படித்திருந்ததால் அப்பள்ளியை விட்டால் எனக்கு வேறு வழி இல்லை. அது ஒரு அரசு பள்ளி போன்றது. பத்தாவது வரை தமிழ் மீடியமும் பிறகு பிளஸ் ஒன், பிளஸ் டூ மட்டும் ஆங்கில மீடியத்தில் சொல்லிக் கொடுப்பார்கள். அப்பள்ளிக்கு முதன் முதல் சென்ற போது, அரசு பள்ளிக்கு உரிய எல்லா தோற்றங்களையும் பார்த்து எனக்கு சற்று பயம் தான். இங்கு படித்தால் நான் படித்து தேறி விடுவேனா என்று? அந்த பயம்  பள்ளி சேர்ந்த சில நாட்களிலேயே மறைந்து விட்டது என்பது வேறு கதை.

ஒரு வழியாக என்னுடைய விண்ணப்பத்தை ஏற்று பள்ளியில் இருந்து  முதல்வருடன் நேர் காணலுக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்ற என்னிடம்  அப்போதிருந்த பள்ளி முதல்வர், இவ்வளவு மதிப்பெண் வாங்கியிருக்கும் நீ, ஏன் பர்ஸ்ட் க்ரூப் எடுக்காமல் காமர்ஸ் க்ரூப் எடுக்கிறாய் என கேட்டு, நான் சொன்ன பதிலில் சமாதானம் அடையாமல் என் பெற்றோரை அழைத்து வந்தால் தான் காமர்ஸ் க்ரூப் குடுப்பேன் என கூறிவிட்டார். அது மட்டும் இல்லை. இப்பள்ளி அரசு பள்ளி போன்றதால், மிக குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தான் முதல் முன்னுரிமை கொடுப்போம். உங்களை போன்றவர்கள் எங்கு வேண்டும் ஆனாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால், எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வேறு எங்கும் பணம் கொடுத்து சேர முடியாது. அதலால், உன் அப்ளிகேஷன் வெய்ட்டிங் லிஸ்டில் தான் இருக்கும். எல்லோருக்கும் இடம் கொடுத்த பிறகு தான் உன்னை கன்சிடர் பண்ணுவோம் என்றும் கூறிவிட்டார்.

சார், நீங்க ரொம்ம்ம்ப நல்லவங்க (வடிவேலு பாணியில் படிக்கவும்) என மனதில் நினைத்துக் கொண்டு அதே நேரம் இந்தப் பள்ளியை விட்டால் நமக்கு காமர்ஸ் க்ரூப் படிக்க வேறு பள்ளி இல்லை. ஆதலால் எப்படியாவது இப்பள்ளியில் சேர்ந்து விட வேண்டும் என காத்திருந்து ஒரு வழியாக சேர்ந்து விட்டேன். இவ்வாறு நான் காமர்ஸ் க்ரூப்பில் சேர்வதற்கு  பல தடங்கல்கள் வந்த போதும் நான் எடுத்த  முடிவின் படி, என் ஆசை படி வைராக்கியத்துடனும் அதே பள்ளியில் கடைசியில் எப்படியோ சேர்ந்து விட்டேன்.

அன்று எனக்கு தெரியாது, நான் படிக்கப் போகும் காமர்ஸ் க்ரூப்பினால் நான் விரும்பிய ஆடிட்டர் ஆக போவதில்லை என்று.

தொடரும்...
   

share on:facebook

Sunday, January 8, 2012

அமெரிக்காவில் இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.


பத்து வருடங்களுக்கு முன் முதல் தடவை அமெரிக்கா சென்றிருந்த போது பென்சில்வேனியாவில் உள்ள மிக பெரிய பூங்கா ஒன்றுக்கு எனது அமெரிக்க நண்பருடன் சுற்றி பார்க்க சென்றிருந்தேன். அப்போது புகைப்படம் எடுப்பதற்காக எனது கை பையை அங்கே போட்டிருந்த மேஜை மீது வைத்து விட்டு சற்று எட்டி சென்றேன். அப்போது எனது அமெரிக்க நண்பர் என்னை அழைத்து, என்ன பையை இப்படி வைத்து விட்டு சென்று விட்டாய். யாராவது எடுத்து சென்றால் என்ன செய்வாய் என? அதற்க்கு நான், இது அமெரிக்கா யார் திருட போகிறார்கள் என பதில் அளித்தேன். அதற்க்கு அவர், கெட்டவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அமெரிக்காவிலும் கூட. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்று.

அதன் பிறகும் ஓரளவு தான் நான் அலர்ட் ஆக இருப்பேனே தவிர அமெரிக்கா என்றால் சற்றும் பாதுகாப்பு உணர்வு அதிகம் தான் எங்களுக்கு. ஆனால், தற்போது நடந்து வரும் சம்பவங்கள் உண்மையிலேயே எங்களுக்கு பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், என் மகளின் ஸ்கூட்டர் (ஸ்கூட்டர் என்றால் நம்மூர் ஸ்கூட்டர் இல்லை. சிறிய ஹான்ட் பாருடன் கூடிய இரண்டு சக்கரங்கள் உடைய காலால் உந்தி செல்லும் சைக்கிள் போன்ற ஒரு வாகனம்) காணாமல் போய் விட்டது. எங்கள் அப்பார்ட்மென்ட் உள்ளேயே முதல் தளத்தில் உள்ள அவளின் தோழியின் வீட்டுக்கு செல்லும் முன் தரை தளத்தில் வைத்து விட்டு சென்றவள் திரும்பி ஒன்றிரண்டு நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டர் காணாமல் போய் விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

அதன் பின் கடந்த சில மாதங்களாக பகல் வேலைகளிலேயே ஓரிரண்டு வீடுகளில் உள்ளே புகுந்து (பக்க வாட்டு ஜன்னல் கதவுகளை திறந்து கொண்டு) லாப் டாப், நகை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் திருடி சென்று இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு தமிழ் பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினார்கள். அப்போது நம் மக்கள் நகை எல்லாம் போட்டுக் கொண்டு அபார்ட்மெண்டை வளைய வந்ததை பார்த்து விட்டோ என்னவோ அப்பெண்ணின் வீட்டிலும் புகுந்து சுமார் 10,000 டாலர் மதிப்புள்ள நகைகளை அபேஸ் செய்து விட்டார்கள்.

போலீசில் புகார் கொடுத்தும் ஒன்றும் பலனில்லை. இங்குதான் சந்தேகப்பட்டால் கூட நம்மூர் பாணியில் ஒருவரை அடித்து உதைத்து உண்மையை வரவழைக்க முடியாதே. அதனால் சந்தேகம் என்று கை காட்டிய நபர்களை கூட சற்று விசாரித்து விட்டு எவிடன்ஸ் இல்லை என்று விட்டு விட்டார்கள்.

இவ்வாறு திருட்டு நடை பெற்ற அனைத்து வீடுகளும் இந்தியர்களுடையது. அதற்க்கு ஒரே காரணம், இந்தியர்கள் என்றால் நகைகள் அதிகம் வைத்திருப்பார்கள் என்றும் அதுவும் 22 காரட் நகைகளாக இருக்கும் (அமெரிக்கர்கள் போடுவதெல்லாம் 12 காரட் 16 காரட் என்று நம்மூர் கவரிங் நகைகள் போல் தான்) என்று திருடர்களுக்கு நன்கு தெரியும். இதில் சுலபமாக திருடிக் கொண்டு போக ஏதுவாக கை அடக்கம் உள்ள மெட்டல் டிடக்டர் கருவி ஒன்றையும் கையிலேயே கொண்டு வந்து விடுகிறார்கள். நாம் எங்கு தான் ஒழித்து வைத்தாலும் ஒன்றும் பிரோஜனமில்லை.

ஆதலால் அமெரிக்கா தானே என இனி அசால்ட்டாக இருந்து விடாதீர்கள் நண்பர்களே. உலகம் மாறிவிட்டது...அமெரிக்காவிலும் ஆட்டையை போட கிளம்பி விட்டார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


share on:facebook

Saturday, January 7, 2012

அரசு மருத்துவமனைகள் லஞ்சம் அற்ற பகுதிகள் - அறிவிக்க தயாரா?


சமீபத்தில் தூத்துக்குடியில் ஒரு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டது எல்லோருக்கும் தெரிந்ததே. அதை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது. இழப்பு எல்லோருக்கும் ஒன்று தான். அதே சமயம் அதை கண்டித்து மாநிலம் முழுதும் மருத்துவர்கள் நடத்திய போராட்டமும் பேச்சுக்களும் தான் கண்டிக்கதக்கது ஆகும்.

நாட்டில் கொலை கொள்ளைகளே  நடப்பதில்லையா? இதே ஒரு போலீஸ்காரர் பணியில் கொலை செய்யப்பட்டால் எல்லா போலீசாரும் போராட்டத்தில் இறங்க முடியுமா. டாக்டர் தொழில் ஒன்றும் அப்படி உயிருக்கு பாத்துகாப்பு அற்ற தொழில் அல்லவே?

அப்படியே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் அடையாள வேலை நிறுத்தமோ மாநிலம் முழுதும் ஒரு அமைதி பேரணியோ நடத்தி இருக்கலாம். அதற்காக ஒரு நாள் முழுக்க நாங்கள் வேலை பார்க்க மாட்டோம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய மாட்டோம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. இதில் இவர்கள் எல்லாம் மெத்த படித்தவர்கள் என நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

கோயம்பேடு காய் கறி மார்க்கெட் வியாபாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால் அதிக பட்சம் அங்கு உள்ள காய்கறிகள் அழுகி போகும். அல்லது தமிழக மக்கள் ஒரு நாள் சாம்பார் ரசம் செய்ய முடியாமல் வெறும் தயிறு ஊற்றி சாப்பிடும் நிலைமை வரலாம். ஆனால் மருத்துவர்கள் தொழில் அப்படி இல்லையே. நகரத்தை விடுங்கள். கிராம புறங்களில் பத்து கிலோ மீட்டர் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவ மனைகளை நம்பி வந்து எத்தனை நோயாளிகள் அன்று ஒரு நாள் மருத்துவர்கள் இன்றி சிரமத்துக்கு ஆளானார்கள்.

இதில் மருத்துவர்கள் நல அமைப்பின் மாநில தலைவர் ஒருவர் "நாங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முடியும்" என வீராப்பு பேச்சு வேறு. கொலைகாரனுக்கும் சிகிர்ச்சை அளிக்க வேண்டிய உன்னத கடமை உள்ள மருத்துவர்களின் பேச்சை பாருங்கள்.

கடைசியாக ஒன்று. மருத்துவ மனைகள் அனைத்தும் பாத்து காக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறீர்களே? அதே போல் அரசு மருத்துவ மனைகள் அனைத்தும் லஞ்சம் அற்ற பகுதிகளாக அறிவிக்க முடியுமா உங்களால்? குழந்தை ஆனா பெண்ணா என சொல்வதிலிருந்து, பெற்றெடுத்த தாயிடம் குழந்தையை காண்பிப்பதில் தொடங்கி பிரேத பரிசோதனை வரை எல்லாவற்றுக்கும் காசை காண்பிக்காமல் அரசு மருத்துவ மனைகளில் ஒன்றும் நடக்காது. இந்த லட்சணத்தில் வீராப்பு பேச்சு வேறு.

காஷ்மீரிலும், பாக்கிஸ்தான் எல்லையிலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் நாட்டை காக்க எல்லையில் தினமும் ராணுவ பணியில் நம் வீரர்கள் உள்ளார்களே. அவர்களுக்கு தான் அரசு உத்திரவாதம் தர வேண்டும். அவர்கள் அணிந்திருக்கும் புல்லட் புரூப் ஜாக்கெட் முதல் தரமானவை என்று. அவர்களை எல்லாம் வந்து உங்களுக்கு காவல் வைக்க முடியாது.

திருந்துங்கள் மருத்துவர்களே.



    

share on:facebook

Wednesday, January 4, 2012

ஆன்லைனில் குப்பை கொட்ட : குப்பதொட்டி.காம் - இது சென்னை ஸ்டைலு


தலைப்பை பார்த்து இது ஏதோ புது பிளாக் நேம்னு நினைச்சீங்கனா அது உங்க தப்பு. குப்பைதொட்டி.காம் - சென்னை கார்பரேசன் செய்ய வேண்டிய குப்பை அள்ளும்/பிரிக்கும் வேலையை ஒரு தனியார் நிறுவனம் ஹை டெக்காக செய்து வருகிறது. அதுவும் ஆன்லைனில். குறிப்பாக மக்காத குப்பையான பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்கள் சரியானபடி ரீசைக்ளிங்  அல்லது உபயோகப் படுத்த படவில்லை என்றால் அதனால் சுற்றுப்புற  சூழலுக்கு கேடு.

சுற்று புற சூழலை பாதுகாக்கும் நோக்கோடும் அதே சமயம் மக்காத குப்பைகளை வீடுகளில் இருந்து சேகரித்து அதற்குரிய விலையை  கொடுப்பதின்  மூலம் வாடிக்கையாளர்களையும் சந்தோசப் படுத்தி  வருகிறார் சென்னையை  சேர்ந்த திரு ஜோசப் ஜெகன்  என்பவர்.  இவர்தான் சிலரோடு சேர்ந்து குப்பை தொட்டி.காம் என்ற  ஆன்லைன் சேவையை  ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

சென்னை வாழ் மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.  முதலில் குப்பைத்தொட்டி.காமில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்  வீட்டில் உள்ள குப்பைகளை  தரம் பிரித்து வைத்துக் கொண்டால் மாதத்திற்கு ஒரு முறை குப்பைதொட்டி.காமில் இருந்து உங்களிடம் முன் கூட்டியே அனுமதி வாங்கிக்கொண்டு உங்கள் வீட்டிற்க்கே வந்து உங்கள் குப்பைகளை பெற்றுக் கொள்வார்கள். அதே நேரம் உங்களுக்கு குப்பைக்கான சன்மானமும் கிடைக்கும். குப்பையை பெற்றுக்  கொண்டதற்கான ரசீதும் உங்களுக்கு ஈமெயிலிலும் அனுப்புகிறார்கள்.

எல்லோருக்கும் சுற்று புற சூழ்நிலை மேல் அக்கறை இருந்தாலும் இந்த அவசர உலகில் குப்பைகளை தரம் பிரித்து அதை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்க்க எல்லோருக்கும் நேரம் இருப்பதில்லை. ஆதலால் தான் இத்திட்டத்தை நாங்கள் தொடங்கினோம் என்கிறார். ஜெகன். ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்ட இந்த ஆன்லைன் சேவையில் இது வரை 
500 பேருக்கு மேல் தங்களை பதிவு செய்துள்ளதவும் தெரிவித்துள்ள ஜெகன்  அவர்கள்,  கூடிய விரைவில் பல வன்னங்களினால் ஆன மூடியுடன் கூடிய குப்பை பெட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு தரப் போவதாகவும் இது மக்காத  குப்பைகளை தரம் பிரிக்க மேலும் உதவும் எனவும் தெரிவிக்கிறார்.

சென்னை மாநகராட்சியின் குப்பை தொட்டிகளில் மறு மதிப்புள்ள மக்காத குப்பை வகைகள் டன் கணக்கில் கொட்டப் பட்டு வீணாவதை பார்த்ததின்  விளைவே இப்படி ஒரு சேவையை ஆரம்பிக்க வேண்டும் என தனக்கு  தோன்றியதாக கூறும் திரு. ஜெகன், கூடிய விரைவில் பல மேற்கத்திய  நாடுகளை போல் நம் நாடும்  குப்பை பராமரிப்பில் சிறந்து விளங்கும்  நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்.

நீங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டுமா? அப்ப இங்க சொடுக்குங்க.

  

share on:facebook

Tuesday, January 3, 2012

திருவள்ளுவரும் டெரரிஸ்ட்டும் ...

தலைப்பை பார்த்துட்டு யாரும் திட்டாதீங்க. சும்மா வேணும்னே பரபரப்புக்காக நான் இத வைக்கல. இன்னும் சொல்லப்போனால் "திருவள்ளுவர் டெரரிஸ்ட்டா" என்று தான் நான் தலைப்பாக வைத்திருக்க  வேண்டும். ஆனால், அப்படி வைக்க என் மனம் இடம் தர வில்லை. சரி விசயத்திற்கு வருவோம்.

கடந்த சில பல ஆண்டுகளாக இந்தியா, அமெரிக்கா என மாறி மாறி வாசம் செய்யும் எங்களுக்கு குழந்தைகள் எக் காரணம் கொண்டும் தமிழை மறந்து விட கூடாது என்பதில் மிகுந்த கவனம் காரணமாக தமிழ் பாடங்களையும், மற்ற பிற தமிழ் சார்ந்த விசயங்களையும் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

அப்படித்தான் சில நாட்களுக்கு முன், அய்யன் திருவள்ளுவரை பற்றி என் இளைய மகளிடம் என் மனைவி எடுத்து சொல்லி இருக்கிறார். திருவள்ளுவர் மிக சிறந்த புலவர், ரொம்ப நல்லவர், நல்ல விஷயங்கள் பல சொல்லி இருக்கிறார் என.  உடனே என்ன நினைத்தாலோ என் மகள், He could be a terrorist also என சொல்லி உள்ளார். எங்களுக்கெல்லாம் இதை  கேட்டவுடன் ஒரே ஷாக். ஏன் இப்படி சொல்கிறாய் என திரும்பி அவளிடமே கேட்டோம். அதற்கு அவள், நீங்கள் தானே அவர் ரொம்ப நல்லவர் என கூறினீர்கள். அதான் அவர் ஏன் நல்லவராக pretend செய்திருக்க கூடாது என நினைத்தேன் என்றாள்.

ஒரு வேளை திருவள்ளுவரின் தாடி மீசை மற்றும் அவரின் தலை முடி ஸ்டைலை பார்த்த பாதிப்பா என தெரியவில்லை. இல்லை இங்கு எப்பொழுதும் "Fight against terrorism" என்று எல்லா டி.வீ. க்களிலும்  நாள் தோறும் போடும் கூப்பாட்டை கேட்டுக் கொண்டிருப்பதால் அவளுக்கு இந்த எண்ணம் வந்ததா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அவள் இப்படி கூறியது எங்களுக்கு ஆச்சர்யம் மட்டும் இல்லை. சற்று அதிர்ச்சியாகவும் தான் இருந்தது. ஹ்ம்ம்...எல்லாம் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் நாம் காணும் செய்திகளும் தான் காரணம் என எண்ணிக் கொண்டு திருவள்ளுவரை பற்றி இன்னும் பல கதைகளை அவளிடம் சொல்லி அவளுக்கு புரியவைத்தோம்.

அட்லீஸ்ட் என் பொண்ணாவது திருவள்ளுவரை டெரரிஸ்ட்டா என கேட்டாள். எங்களுக்கு தெரிந்த ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு (எட்டாவது படிக்கும் பெண்) திருவள்ளுவர் என்றால் யார் என்றே தெரியவில்லை. வெளி நாடுகளில் வாழும் எல்லா குழந்தைகளும் இப்படி தான் என நான் கூற வரவில்லை. சில குழந்தைகள் மிக அழகாக தமிழ் பேசவும் செய்வார்கள்.

வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள்/இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நம் மொழி கலாச்சாரம் பற்றி அவர்களுக்கு கஷ்டமில்லாத வகையில் அவ்வப்போது சொல்லிக் கொடுப்பது இம்மாதிரியான சங்கடமான கேள்விகள்/பதில்களை தவிர்க்கும்.


எப்படி இருந்தாலும் வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகள் தமிழ்  பேசவும்,  தமிழ் கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்வதும் அவர்களின் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. சிலர் வெளி நாட்டில் இருப்பதால் தங்களின் குழந்தைகள் ஆங்கிலம் நன்றாக தெரிந்து கொள்வது தான் முக்கியம் என வீட்டில் கூட குழந்தைகளிடம் தமிழ் பேசுவதை  தவிர்க்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.  வெளிநாட்டில் வளரும் குழந்தைகளுக்கு ஆங்கில புலமை தானாக வரும்.  தாய் மொழிதான் நாம் சொல்லி கொடுத்து வளர்க்காவிட்டால் அவர்களுக்கு   மறந்து போய் விடும் அபாயம் இருக்கிறது. சொல்றத சொல்லிப்புட்டேன்க.  அப்புறம் உங்க விருப்பம்.   

share on:facebook

Sunday, January 1, 2012

2012 Top 10


முல்லை பெரியாறு பிரச்சனையையோ, கூடங்குளம் அணு உலை சிக்கலையோ தீர்த்து வைக்கும் இடத்தில் நாம் இல்லை. ஆனால், நிச்சயம் கீழ் கண்டவற்றில் சிலவற்றை நம்மால் நிச்சயம் நிறை வேற்ற முடியும். 2012 இல் அதை முயற்சிப்போமே...

# பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.

# ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதை தவிர்க்கலாம்.

# இரவு நேரங்களில் காரில் வெகு தூர பயணங்களை (self driving) தவிர்க்கலாம்.

# மாதம் ஒரு நல்ல புத்தகத்தை வாங்கலாம்/வாசிக்கலாம்.


# ரோட்டில் போகும் போதும், வரும் போதும் குப்பைகளை எறிவதை தவிர்க்கலாம்.


# வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு ஏழை குழந்தையின் படிப்பிற்கு முடிந்ததை உதவலாம்.


# பெற்றோர்களை விட்டு வெளி ஊர்களில் வாழ்பவர்கள் அவர்களுக்கு பணம் அனுப்புவதை மட்டும் கடமை என எண்ணி விடாமல் அவ்வப்போது சென்று அவர்களுடன் ஓரிரு நாட்கள் தங்கி இருந்து கவனித்துக் கொள்ளலாம்.


# குழந்தைகளுக்கு உடற் பயிற்சியாக அமையக்கூடிய பழைய விளையாட்டுக்களை சொல்லிக் கொடுக்கலாம்.


# நாமும் தினமும் ஒரு முறையாவது ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் உடற் பயிற்சி/நடை பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளலாம்.


# சேமிப்பு. இதுவும் அவசியம். அதே நேரத்தில், வாய்ப்பும் வசதியும் இருந்தால் நாலு இடங்களுக்கு சென்று வருவது மனதையும் அறிவையும் விசாலமாக்கும். முயற்சிக்கலாமே.


share on:facebook