Friday, August 16, 2024

'துண்டு' அரசியல்

 எனது நண்பர் ஒருவர் என் பள்ளி நண்பர்கள் குழுவில் 'துண்டு' பற்றி யாரோ எழுதிய பதிவை பகிர்ந்திருந்தார். பொழுது போக்கிற்க்காக எழுதப்பட்ட பதிவு அது. அதுவே 'துண்டு' பற்றி சில வரலாற்று செய்திகளை என்னை இங்கே பகிர வைத்தது.


தமிழகத்தில் துண்டுக்கு ஒரு பெரிய அரசியல் மற்றும் சமூக வரலாறு உண்டு. சுதந்திரத்துக்கு பின் பெரிய அரசியல் கட்சிகளில் பொறுப்புகள் அனைத்தும் பெரும் பணக்காரர்கள் மற்றும் சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் சிலரின் கைகளில் மட்டுமே இருந்து வந்தது.


அந்த காலத்தில் தான் திராவிட கட்சிகள்/கழகங்கள் உருவாகி நடுத்தர, ஏழை மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க தொடங்கி அவர்களை


அரசியல் களத்தில் முன்னிறுத்தியது. அதன் அடையாளமாக அவர்களில் தலைவர்களை உருவாக்கியது. அவர்களை மேடை ஏற்றி அவர்களுக்கு எல்லோருக்கும் முன்னால் துண்டு அணிவித்து மரியாதை செலுத்தியது.


குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும், ஏழைகளும் மற்றவர்களுக்கு முன் தங்கள் தோளில் துண்டு அணிய முடியாது. அப்படியே அணிந்தாலும் அவர்களை பார்த்தவுடன் அதை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும் இதை ஓரளவிற்கு திராவிட கட்சிகள் மாற்றின. எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டில் இதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை, தொழிலாள வர்க்கத்தினரை தங்கள் பக்கம் ஈர்த்தனர்.


தமிழக அரசியல் காட்சிகள் தவிர பிற மாநில காட்சிகள் மேடைகளில் இம்மாதிரி துண்டு அணிவித்து மரியாதை செய்வதை நான் பார்த்ததில்லை. இன்றும் கிராமப்புறங்களில் பெரும்பாலானோர் தவறாமல் துண்டு அணிவது பார்க்கலாம். 


துண்டுகள் பல வண்ணங்களில், வகைகளில், தரத்தில் கிடைக்கிறது. விவசாய சங்கங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் பச்சை துண்டு அணிவர். புதுவுடைமை கட்சியை சேர்ந்தவர்கள் சிகப்பு துண்டும், மற்ற கழக உடன்பிறப்புகள் தங்கள் கட்சி பார்டர் போட்ட துண்டுகளையும் அணிந்து கொள்வார்கள்.


காந்தி 'சுதேசி' போராட்டத்தை அறிவித்தபோது தந்தை பெரியார் அவர்கள் தன் மனைவியுடன் தலையில் மூட்டையுடன் தெரு தெருவாக சென்று கைத்தறி ஆடை மற்றும் துண்டுகளை விற்றது வரலாறு.


என் தந்தை மூன்று வகையான துண்டு வைத்திருப்பர். வீட்டில் இருக்கும் போது சாதாரண வெள்ளை துண்டும், வெளியில் சென்றால் 'டர்கி டவல்' என்னும் சற்று மென்மையான, சிறிது வேலைப்பாடுகள் கொண்ட துண்டை பயன்படுத்துவார். இது சற்று விலையும் அதிகம். மேலும் சிகப்பு/மெரூன் வண்ணத்தில் கம்பளியால் செய்த நீண்ட ஷால் போன்று ஒன்றை குளிர் காலங்களின் போது அணிந்து கொள்வார்.


ஈரளத்துண்டு நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நான் இதுவரை தமிழகம் தவிர வேறு எங்கும் பார்த்ததில்லை. இதை தவிர துண்டினால் வேறு சில பயன்களும் உண்டு. பயணத்தின் போது பேருந்திலோ, தொடர் வண்டியிலோ இடத்தை பிடிப்பதற்கு மிகவும் பயன்படும்.


அவன் ஏற்கெனவே துண்டு போட்டுட்டான் என சிலர் சொல்வார்கள். இதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கே தெரியும்😃


மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நான் அறிந்த/படித்து தெரிந்து கொண்டவையே. யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல.


share on:facebook

Tuesday, November 5, 2013

'இசைப்ரியா' பிரபாகரனின் மகளா? அதிர்ச்சி செய்தி.

LTTE Prabhakaran Daughter IsaiPriya Raped and Killed by Srilankan Army. 


தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர் பயணம் ஆகியவற்றால் சில நாட்கள் அதிகமாக செய்திகளை மேய முடியவில்லை. அதனால் ஆன்லைனில் ஞாயிறு இரவு செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த பொழுது தான் இந்த செய்தியை பார்க்க நேர்ந்தது. தெரிந்து தான் இப்படி செய்தி வெளியிடுகிறார்களா? இல்லை யாரை பற்றி 'ரிப்போர்ட்' செய்கிறோம் என்றே அறியாமல் செய்திகளை வெளியிடுகிறார்களா என தெரியவில்லை.

மேலே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது டைட்டில். அதன் கீழே 'இசைப்ரியா' வின் வீடியோவையும் அதன் பின் இவ்வாறு மீண்டும் இரண்டாம் முறை தவறான தகவலை தந்திருக்கிறார்கள். 

Isaipriya D/O of LTTE Chief Prabhakaran, Found
Dead in a Ditch with Serious Injuries and Evident
of Sexual Assault.

ஓரிருவர் பின்னூட்டத்தில் இது தவறான தகவல் என்று எடுத்து சொல்லியும் இன்னமும் v6news செய்தியின் பொருளை மாற்றவில்லை. 

share on:facebook

Sunday, October 27, 2013

மாட்டு வண்டி: தார் குச்சியும் லாந்தர் விளக்கும்.


எத்தனை பேருக்கு மாட்டு வண்டி பயணமும் அதை ஓட்டும் அனுபவமும் கிடைத்திருக்கும் என எனக்கு தெரியவில்லை. 80 களில் எங்கள் வீட்டிற்க்கு கிராமத்துடன் நேரடி தொடர்பும் விவசாயமும் இருந்தது. காலப்போக்கில் இப்போது விவசாயம் இல்லை. ஆனால் கிராமத்துடன் ஆன தொடர்பு ஓரளவிற்கு இருக்கிறது.

அப்போது நான் 5-6 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிந்திருப்பேன். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை ஊரிலிருந்து டவுனுக்கு (அப்படி தான் தஞ்சை நகரத்தில் உள்ள எங்கள் வீட்டை சொல்வார்கள்) மாட்டு வண்டியில் தஞ்சையில் எங்கள் வீட்டில் வளர்த்த நான்கைந்து மாடு கன்றுகளுக்கு வைக்கோலும், வீட்டிற்க்கு தேவையான நெல்/உளுந்து வகையறாக்களும் வந்து சேரும். போகும் போது அதே வண்டியில் வீட்டில் வளர்த்த மாடுகள் மூலம் சேர்ந்திருக்கும் இயற்க்கை உரமான சாணி எருவை கிராமத்து வயல்களில் தெளிக்க எடுத்து செல்வார்கள்.

தஞ்சையில் வண்டி டேரா போட்டிருக்கும் ஒன்றிரண்டு நாட்களில் கெஞ்சி கூத்தாடி ஓரிரு முறையேனும் அதை எடுத்து எங்கள் தெருக்களில் ஒட்டி விடுவேன். அதில் அப்படி பட்ட சந்தோசம் எனக்கு.

இப்போ என் காரில் இருக்கும் பவர் steering எனக்கு பெரிய ஆச்சர்யத்தை தருவதில்லை. ஆனால் அந்த ரெட்டை மாட்டு வண்டியை சாலைகளில் திருப்பும் போது ஒரு மாடு நடையை குறைத்த பின் மற்றொரு மாடு அழகாக திரும்பும் பாருங்கள். அப்போது அதை செய்ய லாவகமாக உதாரனத்திற்க்கு, வலது பக்கம் திரும்ப வேண்டும் எனில், வலது மாட்டின் கயிற்றை இழுத்து பிடித்து இடது புற மாட்டின் கயிறை லூசாக விட்டு அதை லேசாக குச்சியால் தட்டி கொடுக்கும் போது, கயிற்றை இழுத்து பிடித்த மாடு, கயிறு இறுகும் காரணத்தால் கழுத்தோடு சேர்த்து தலையை சற்றே ஒரு புறமாக மேலே தூக்கிக் கொண்டு நடையை உள் வாங்கும். அப்போது அடுத்த மாட்டை பார்த்து, 'சீக்கிரம் நீயும் திரும்பு' என்பது போல் பார்க்கும். உடனே இடது புற மாடு பலது புறம் திரும்பி நடக்க ஆரம்பிக்கும். நான்கைந்து அடி சென்ற பின் இழுத்து பிடித்த ஒரு மாட்டின் கயிறாய் லூசாக விட்டோமானால் தானாக இரண்டு மாடுகளும் நேர் கோட்டிற்கு வந்து விடும்.   

அப்போதெல்லாம் இன்று உள்ள அளவிற்கு டூ வீலரோ கார்களோ கிடையாது. அப்போ போக்குவரத்து காவலர் எப்படி 'பைன்' போடுவார்? என நீங்கள் கேட்பது தெரிகிறது. அப்ப யார் மாட்டுவாங்கனு கேடீங்கனா, இந்த மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் தான. ஆம், மாட்டை விரைவாக ஓட்டுவதற்கு 'தார் குச்சி' என்று ஒன்றை உபயோகிப்பார்கள். அதாவது குச்சியின் ஒரு முனையில் கூர்மையான ஆணி போன்ற ஒரு பொருளை இணைத்து விடுவர். பின் அதை கொண்டு மாட்டின் தொடை பாகத்தில் மாற்றி மாற்றி குத்தும் போது மாடு வேகம் பிடிக்கும். இது அன்றைய காலகட்டத்திலேயே  தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால், தார் குச்சியால் குத்தாமல் மாடு மேடான பகுதிகளில் மற்றும் அதிக பாரம் இருப்பின் நகராது. பெரும்பாலானோர் தார் குச்சியை உபயோகப்படுத்துவார்.

அப்புறம் என்ன? ஒவ்வொரு முறையும் மாட்டு வண்டிகளை மறித்து, வண்டி முழுதும், அது முழுதும் வைக்கோல் ஏற்றி இருந்தால் கூட தார் ஊசி இருக்கிறதா என தேடி தேடி பைன் போடுவார்கள். வண்டி காரர்களும், நாம் ட்ராபிக்கை கண்டவுடன் செல் போனை மறைப்பது போல், தார் குச்சியை மறைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அடுத்ததாக மாட்டு வண்டி இரவில் சென்றால் அதற்க்கு 'ஹெட் லைட்' அவசியம் இருக்க வேண்டும். எங்கள் ஊரில் அதற்க்கு லாந்தர் விளக்கு என்போம். அதை எறிய விட்டு வண்டியின் அடியில் கட்டி விட வேண்டும். அதனால் ஒன்றும் பெரிதாக வெளிச்சம் வந்து விட போவதில்லை. இருப்பினும், சாலை விளக்குகளே இல்லாத கிராம சாலைகளில் செல்லும் போது இந்த அடியில் கட்டிய லாந்தர் விளக்கு ஓரளவு வெளிச்சத்தை கொடுக்கும். இந்த லாந்தர் விளக்கை கட்ட வில்லை என்றாலும் பைன் தான்.

தஞ்சையிலிருந்து ஊருக்கு வண்டி கிளம்பும் போது வண்டி ஓட்டிகளிடம், தார் குச்சி வேண்டாம்பா, லாந்தர் விளக்குல என்னை இருக்கானு பாத்துக்குங்க என்று திரும்பி திரும்பி சொல்லி அனுப்பி விட்டாலும், அவ்வப்போது, போலீசில் மாட்டிக்கொள்வர்கள். மாட்டு வண்டி பயணம், அதுவும் இரவில் பயணம் செய்வது ஒரு அலாதி அனுபவம். வேறொரு பதிவில் அதை பகிர்கிறேன்.





share on:facebook

Thursday, October 24, 2013

அமெரிக்காவிலிருந்து TV கொண்டு வரீங்களா? அப்ப இத படிங்க மொதல.



பல லேட்டஸ்ட் மாடல் மின்னணு பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே குறைந்த விலைக்கு கிடைத்தாலும் ஒரு சில பொருட்கள் அமெரிக்காவில் இன்னமும் சீப் தான். அந்த வகையில் LED மற்றும் Smart டிவிக்கள் அமெரிக்காவில் விலை மிக குறைவு. அத்துடன் அங்கு நாம் பயன்படுத்தி இருப்போம். அதை இங்கு கொண்டுவருவதால் நமக்கு இரட்டை லாபம்.

அதிலும் 40 இன்ச் வரை எடுத்து வரப்படும் டிவிக்களுக்கு கஸ்டம்ஸ் ஒன்றும் டியூட்டி கட்ட சொல்லுவதில்லை (சமீபத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் டியூட்டி போடுவதாக கேள்வி. இருந்தும் கூட இந்திய விலையை ஒப்பிட்டால் லாபம் தான்). ஆனால் இங்கு வந்த பிறகு அதற்க்கு சில வேலைகளை செய்தால் தான் படம் பார்க்க முடியும்.

முதல் வேலையாக 110 டு 220 வோல்டேஜ் கன்வெர்டர் வாங்கி விடுங்கள். அதோடு சேர்த்து நீங்கள் எத்தனை இன்ச் டிவி கொண்டு வருகிறீர்களோ அதற்கென உள்ள ஸ்டெபிலைசர் வாங்கி விடுங்கள். இது எல்லாம் இருந்தால் கூட அமெரிக்க டிவி இங்கு வேலை செய்யாது. காரணம் அமெரிக்க டிவிக்கள் NTSC சிஸ்டத்திலும் இந்திய டிவிக்கள் PAL என்ற வேறொரு தொழில் நுட்பத்தில் வேலை செய்யக்கூடியவை. அமெரிக்க டிவியை இங்கு வெறுமனே கனெக்க்ஷன் கொடுத்தால் இருபது வருடத்திற்கு முன் கருப்பு வெள்ளை டிவியில் புள்ளி புள்ளியாக படம் தெரியுமே, அது போல் தான் பார்க்க முடியும்.

அப்ப என்ன செய்யறதுன்னு கேக்குறீங்களா? இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நீங்கள் இன்னும் ஒரு கன்வெர்டர் வாங்க வேண்டும். அதாவது NTSC டு PAL கன்வெர்டர். அல்லது HD வசதியுடன் உள்ள டிஷ் கனெக்க்ஷன் எடுக்க வேண்டும். இங்கு தான் மீண்டும் ஒரு பிரச்சனை. அதாவது அமெரிக்க டிவிக்கள் 60 Hz இல் வடிவமைக்கப் பட்டது. இந்திய டிவிக்களோ 50 Hz கொண்டவை. சோ, நீங்கள் HD கனெக்க்ஷன் வாங்கும் போது உங்களது HD பாக்ஸில் இந்த செட்டிங்கை மாற்ற வேண்டும். அது என்ன அவ்ளோ பெரிய மேட்டரான்னு கேட்டீங்கனா. இல்லீங்க, அது உங்கள் HD பாக்ஸை செட்டப் செய்ய வரும் டெக்னீஷியனை பொறுத்து தான்.

இதில் வீடியோகானின் D2H கனெக்க்ஷன் எடுத்தால் மட்டும் தானாக Hz செட் ஆகி விடுமாம். ஆனால் நான் TATASKY HD எடுத்து விட்டு படாத பாடு பட்டுவிட்டேன். முதலில் TATASKY யில் 60 Hz வசதியே இல்லை. சமீபத்தில் தான் இந்த வசதியை கொண்டு வந்துள்ளார்கள். 60 Hz செட்டப் எப்படி செய்வது என்பது அவர்களின் technician எவருக்கும் தெரியவில்லை. கனெக்க்ஷன் கொடுத்த பிறகு 'mode not supported' என்று மட்டும் தான் டிவியில் தெரிகிறது. வேறு ஒன்றும் தெரியவில்லை. பின் technician ஐ அனுப்பி விட்டு google முழுதும் மேய்ந்து மேலும் நண்பர்களிடம் அவர்களின் அனுபவங்களை கேட்ட பிறகு தான் 60 Hz எப்படி செட்டப் செய்வது என தெரிந்தது.

மறு நாள் மீண்டும் அதே technician ஐ வரவழைத்து நான் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவர் செய்து முடித்தார். TATASKY போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு வசதியை கொண்டு வந்த பின் அதை எப்படி install செய்வது என்று கூட அவர்களின் technician களுக்கு சொல்லி கொடுக்கவில்லை. இவர்களுக்காக நான் இரண்டு மூன்று மணி நேரம் இணையத்தில் தேடி எப்படி செய்வது என சொல்ல வேண்டி உள்ளது.

சரி அப்ப நீங்க எப்ப அமெரிக்காவிலிருந்து டிவி எடுத்து வர போறீங்க?


 




share on:facebook

Sunday, October 20, 2013

காணாமல் போன என் ஐ-போன்


கடந்த சனியன்று தி. நகர் சென்றேன். ஒரு சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று. டிராபிக், பார்க்கிங் பிராப்ளம் இவற்றை தவிர்க்க மாநகர பேருந்தில் பயணித்தேன். ரொம்பவும் ஜாக்கிரதை  உணர்வுடன் பர்ஸ்சை பின் பாக்கட்டிலிருந்து முன் பாக்கட்டிற்கு மாற்றி இருந்தேன். அலை பேசி மட்டும் எப்போதும் போல் பெல்டில் மாட்டக்கூடிய பவுச்சுடன் பத்திரமாக முன் பக்கம்.

சில நேரங்களில் மாநகர பேருந்து பயணம் மிகவும் வசதியாக எனக்கு தெரிகிறது. நெற்குன்றத்திலிருந்து நேராக தி. நகருக்கு ஜஸ்ட் ஒன்பது ரூபாய் செலவில் சென்று விடலாம். தி. நகர் பேருந்து நிறுத்தத்தை அடையும் முன்பே ரங்கநாதன் தெரு சந்திப்பில் இறங்கி விட்டேன். போக வேண்டிய இடம் முன்னாலேயே கடந்து விட்டதால் மீண்டும் திரும்பி நடந்தேன்.

ஐநூறு அடி நடந்திருப்பேன். தி. நகர் பேருந்தில் வர எவ்வளவு நேரம் ஆனது என்று யோசித்தபடியே நடந்தேன். தி. நகர் கூட்டத்தில் கையில்  வாட்சை வேறு ஏன் கட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்ற அதீத ஜாக்கிரதையால் அன்று அதையும் கலட்டி வைத்து விட்டு தான் வந்தேன். சரி நேரம் தற்போது என்னவென்று பார்ப்போம் என்று ஐபோன் பவுச்சை ஓபன் பண்ண கையை வைத்தேன். அப்படியே ஒரு வினாடி உலகமே இருண்டு விட்டது. உடலில் உள்ள ஐம்புலன்களும் வேலை செய்ய மறுத்து விட்டன. ஆம். பவுச் ஏற்கனவே ஓபன் ஆகி இருந்தது. உள்ளே போன் இல்லை.

ஓரிரு வினாடிகள் சுதாரிப்பதற்குள் மண்டைக்குள்ளே என்னனவோ ஓடுகிறது. உள்ளே இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போடோக்கள், காண்டாக்ட்டுகள், நோட்பேட் அப்டேட்ஸ் அது இதுவென்று அய்யகோ...என்ன செய்வேன். போன் மட்டும் போனால் பரவாயில்லை. அதிலிலுள்ள டேட்டா தான் மிகவும் முக்கியம். அதை விட முன்பக்கம் வைத்து இருந்த ஒரு போனை கூட நம்மால் பத்திரமாக பாதுகாக்க முடியவில்லையே என்று என் மீதே எனக்கு ஏற்பட்ட கோவம், அவமானம்.

வீட்டில் சாமி இல்லை என்று மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வந்தேனே. இனி வாழ்க்கை பூராவும், சாமியை திட்டினீங்கள அதான் சாமி தண்டனை கொடுத்துடுச்சு என்று சொல்லி சொல்லி காட்டுவார்களே என்ற கவலை. இதை எப்படி குழந்தைகளிடம் முதலில் சொல்வது. அப்படி பத்திரமா போகணும், இப்படி பத்திரமா வச்சுக்கணும்னு எல்லாம் எங்களுக்கு சொல்வீங்களே இப்போ நீங்க...?

போலீஸ் பீட் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்றால் அது ஒரு ஐநூறு அடி தாண்டி இருந்தது. அங்கு போவதற்குள் என் போனை எடுத்தவன் தப்பித்து விடுவானே. சரி, அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம? ஹூஹூம்..என்ன செய்வது என்று யோசித்த கணத்தில். இது நடந்தது எல்லாம் ஓரிரு வினாடிகளில் தான். ஏதோ ஒன்று உள் மண்டைக்குள் உறுத்தியது. அது இப்போ, இப்போ தான் இந்த விநாடி தான் நம்ம போன் திருடு போய் விட்டது என்று ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லியது. அதை உடனே என் மூளை ஏற்றது.

சடாரென்று திரும்பி எதிர் திசையில் நடக்க துவங்கியவன், அரக்க பரக்க சுற்றும் முற்றும் எதிரே வந்தவர்களை எல்லாம் திருடர்களாகவே பார்த்தேன். ஒரு இரண்டடி நடந்திருப்பேன். எதிரே வந்தவர்களில் ஒருவர், கையில் ஒரு போனை வைத்துக்கொண்டு  ஏதோ செய்து கொண்டே நடந்து கொண்டிருந்தார். என்னையும் அறியாமல் என் கை அவரின் கையை பற்றியது. ஏய்....என்று சிறிது மிரட்டலான அதட்டல், என்னை கேட்காமல் என் குரல் அவ(ரை)னை மிரட்டி இருக்க வேண்டும்.

சார், இது உங்களுதா என்று என் போனை, ஆம். அது என் போனே தான். என்னிடமே நீட்டினார். கீழே கிடந்துச்சு என்று என்னிடம் மறு பேச்சு பேசாமல் கொடுத்து விட்டு எந்த சஞ்சலமும் இல்லாமல் தன் நடையை தொடர்ந்தார். ஒரு கணம் என் கண்களால் என்னையே நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் என் போனை பார்த்தபடியே என் கண்கள் கலங்கி விட்டன. அடுத்த நிமிடமே பவுச்சுடன் எடுத்து முன் பாக்கட்டில் வைத்து விட்டு நடையை தொடர்ந்தேன்.

உண்மையிலேயே நான் நடந்து சென்ற போது போன் பவுச்சை விட்டு கீழே விழுந்து, அதை அவர் எடுத்து என்ன செய்வது ஏது செய்வது என்று நினைத்துக் நடந்து வந்த அந்த தருணத்தில் தான் அவர் என் எதிரே தென் பட்டாரா? அவர் திருடியது போலும் எனக்கு முழுமையாக தோன்றவில்லை. பின் ஏன் போனை கொடுத்து விட்டு நிற்காமல் சென்று விட்டார்? ஒரு வேளை அவர் நல்லவராக இருந்து, நாம் அவரை தவறாக நினைத்து போலீஸில் சொல்லி விடுவோமோ என்று பயந்து அவர் வேறு ஏதும் சொல்லாமல் நடையை கட்டி விட்டாரா? இல்லை அவன் செல் போன் திருடனே தானா?  ஒன்றுமே புரியவில்லை இன்னமும்.

எப்படியோ...காணமல் போன மிக முக்கியமான ஒரு பொருள், அதும் தி.நகர் போன்ற இடத்தில், தீபாவளி நேரத்தில். திரும்பி கிடைத்தது என்றால்?

Oh My God... 

share on:facebook

Thursday, October 3, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...தேடி பார்க்க வேண்டியது.


பாயும் புலி, முரட்டுக் காளையுடன் மஹாகவி காளிதாசையும் ஹரிச் சந்திராவையும் தேடி தேடி தஞ்சை 'ஞானம்' போன்ற தியேட்டர்களில் இரவு இரண்டாம் காட்சி பார்த்து ரசித்த சாதாரண சினிமா ரசிகன் மட்டுமே நான். சினிமா விமர்சனத்திற்கும் எனக்கும் வெகு தூரம். அதலால் இது ஒரு சினிமா விர்மசனம் இல்லை.

சமீபத்தில் பார்த்த 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' சினிமா மட்டுமே என்னை இப்பதிவை எழுத தூண்டியது. முதலில் இப்படி ஒரு படம் வெளிவந்துள்ளது என்னை போன்ற சினிமா அதிகம் பார்க்காதவர்களுக்கு தெரியவே இல்லை (தற்போதெல்லாம் ஆடிக்கு அல்லது ஆவணிக்கு ஒரு முறை தான் சினிமா பார்கிறேன். அதுவும் காமெடி படம் அல்லது நல்ல படம் என்று பலர் சொன்னால் மட்டுமே).

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்ற தலைப்பை பார்த்து ஏதோ வித்தியாசமான பதிவாக தெரிகிறதே என்று எண்ணி தான் நண்பர் 'அதிசா'வின் பதிவை திறந்து பார்த்தேன். அப்போது தான் அது மிக்க்ஷின் படைப்பான புதிய படம் என்று தெரிய வந்தது. ஓரிரு பாராவை படித்தவுடன் பக்கத்தை மூடிவிட்டேன். இனி நேராக படத்தை தான் பார்க்க வேண்டும் என்று. இத்தனைக்கும் அன்று தான் வெகு மாதங்கள் கழித்து குடும்பத்துடன் வ.வா.சங்கம் பார்த்து விட்டு திரும்பி இருந்தேன்.

ஒரு சில பொக்கைவாய் சிரிப்பை தவிர அந்த படத்தில் என்ன இருக்கிறது என தெரியவில்லை. ஒரே ஆறுதல் சும்மா மேனா மினுக்கி கதா நாயகிகளோ நாயகர்களோ இல்லாமல்(அஞ்சு பைசா செலவு இல்லாமல்), பார்த்து பார்த்து புளித்து போன வெளிநாட்டு கடை வீதிகளையும் கடற்கரைகளையும் காட்டாமல் நாம ஊர் அட்மாஸ்பியரில் படம் எடுத்தது மட்டும் தான் பாராட்ட வேண்டிய விஷயம். சிவா கார்த்திகேயன் கொஞ்சம் உட்கார்ந்து யோசிக்க வேண்டும் இல்லை என்றால் சீக்கிரம் காணமல் போய் விடுவார்.

இப்படி பட்ட படங்களுக்கு நடுவே 'ஓநாயும் ஆடுக்குட்டியும்' ஏன் காணமல் போகிறது என்பது தான் புரியவில்லை. ஒருவேளை படத்திற்கு அதிகம் விளம்பரமில்லை என்று நினைக்கிறன். மிக்க்ஷினின் 'நந்தலாலா' பார்த்து பிரமித்து போனேன். ஆனால் பிறகு அது ஒரு அயல் நாட்டு காப்பி என்ற போது சற்று சலிப்பானேன். இருந்தாலும் கொஞ்சம் யோசித்து பார்த்தால் அதற்கும் ஒரு திறமை நம்பிக்கை வேண்டும். அந்த வகையில் அவரை பாராட்ட தோன்றியது. என்ன ஒன்று இம்மாதிரி காப்பி அடிக்கும் போது தைரியமாக அதை டைட்டிலில் போட்டால் நன்று.

'ஓநாயும் ஆடுக்குட்டியும்' காப்பி வகையா என எனக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் அதை பாராட்டித்தான் தீர வேண்டும். முதல் காட்சியிலிருந்து அவராகவே முடிச்சை அவிழ்க்கும் யாராலும் நிச்சயம் அடுத்து என்ன நடக்கப் போகிறது என அவதானிக்க முடியாது என்றே நினைக்கிறன். அங்கேயே அவர் வெற்றி பெற்று விட்டார். அந்த முடிச்சை அவிழ்க்கும் நேரமும் இடமும் சிச்சுவேஷனும் 'ஹாட்ஸ் ஆப்' மிக்க்ஷின். சரி முடிச்சு தான் அவிந்து விட்டதே என்று நினைத்தால் அதன் பிறகும் கடைசி காட்சி வரை சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ் தான்.

படத்தில் அதிகம் பேசியவர்கள் போலீஸ் மட்டுமே. மற்றபடி ஒவ்வொரு காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும், இசையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அளவான நடிப்பு மட்டுமே காட்சிகளை நகர்த்துகிறது. பாதி திரையரங்கமே நிறைந்திருந்த போதிலும் அவ்வப்போது பலத்த கைதட்டல்கள் கேட்டன. காமெடி சீனுக்கோ, குலுக்கல் டான்ஸ்சுக்கோ, பறந்து பறந்து தாக்கும் சண்டைக்கோ அல்ல. படத்தின் இசைக்கும், காட்சி அமைப்புக்கும் கிடைத்த அங்கீகாரங்கள் அவை.

'முதல் மரியாதை' போன்ற படங்களில் ராஜாவின் பின்னணி இசையை வைத்தே படத்தின் கதையை காட்சி காட்சியாக சொல்லி விடலாம். அது போல் நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜாவுக்கென்றே அமைந்த படம். பின்னி எடுத்து விட்டார். நிசப்பதம் கூட சரியான தருணத்தில் ஒரு இசை தான் என்பதை பல இடங்களில் நிரூபித்துள்ள ராஜா, என்றுமே எங்கள் இசைஞானி இளைய ராஜாதான். அப்பப்பா. என்ன ஒரு பின்னணி இசை, படம் முழுதும். படத்தின் நாயகன்(!) மருத்துவ மாணவர் ஓரிரு காட்சிகளில் தப்பித்து ஓடும் போது ராஜாவின் இசை நம்மையே மிரட்டி  ஓட வைக்கிறது.

படம் முடிந்த பின் போடப்பட்ட டைட்டிலை கூட எழுந்து போகாமல் எழுந்தவர்கள் மீண்டும் உட்கார்ந்து பார்த்தது அப்படத்திற்கு படத்தில் பணியாற்றியவர்களுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக இருந்தது. Last but not the least, படம் முடிந்தவுடன் பலரும் கைதட்டினார்கள். A honor to a good movie.

அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு, தண்ணி, காதல், குத்துப்பாட்டு என்று ஒரே வகையான மசாலா படங்களுக்கு மத்தியில் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' வித்தியாசமான படம் மட்டுமல்ல. சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.  சினிமாவை நேசிப்பவர்கள் அவசியம் இந்த படத்தை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும். அதற்க்காகதான் இந்த பதிவு. படம் பார்த்து இரண்டு நாட்களாகியும் இன்னமும் ஓநாயில் ஆரம்பித்து கடைக்குட்டி ஆட்டுக்குட்டி வரை மனத்தில் இருந்து மறைய மாறுகிறது. பிறகு குழந்தைகளை அழைத்துக்கொண்டு போவதை தவிர்க்கவும். நான் போய் இருந்த போது பல குழந்தைகள், 'அம்மா வாம்மா வீட்டுக்கு போகலாம்' என அழ ஆரம்பித்து விட்டன. வயலன்ஸ் அதிகம் அல்லவா.

படத்தில் சின்ன சின்ன குறைகள். லாஜிக் இடித்தல்கள் உள்ளன. அவ்வளவு சீரியஸ் ஆபரேஷன் செய்து கொண்ட பின் இவ்வளவு ஆக்க்ஷன் அடிதடி ஒருவரால் செய்ய முடியுமா? சர்வ சாதரணமாக போலீஸ் ஆபீசர்களை ஆங்காங்கே சுட்டு விட்டு போய் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிட்டிக்குள் இப்படி எல்லாம் நடக்குமா? அப்புறம் இந்த போலீஸ்காரர்கள் சல்யூட் அடிக்கிறார்களே, அது ரொம்ப செயற்கையாகவும் சில்லி தனமாகவும் தெரிகிறது.          



share on:facebook

Tuesday, September 10, 2013

வெள்ளைக்கார புள்ளைத்தாச்சி


நடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆளாவர். உதாரணமாக லைட் போட வேண்டும் என்றால் சுவிட்சை மேலே அமுக்கினால் தான் அங்கு 'ஆன்'. (பெரும்பாலான) பூட்டுக்கள் கிளாக் வைஸ் திருப்பினால் அது லாக் ஆகும். நம்மூரில் அது ஓபன் ஆகும். இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். என்னடா தலைப்பிற்கும் சப்ஜட்டுக்கும் சம்மந்தம் இல்லை என பாக்குறீங்களா? மேலே படியுங்கள்.

மேற்சொன்ன பல விஷயங்கள் நான் அங்கு போவதற்கு முன்பே எனக்கு தெரியும். காரணம் அங்கு சென்று வந்த நண்பர்கள் கூறி கேட்டது. பலருக்கும் கூட தெரிந்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் என்னை மிகவும் கவர்ந்தது இரண்டு விஷயங்கள். 1. குழந்தை வளர்ப்பு. 2. மாசமாக இருக்கும் பெண்கள்.

முதலில் குழந்தை வளர்ப்பை பார்ப்போம். கை குழந்தைகளை அவர்கள் கையாளும் முறை சற்றே வித்தியாசமானது. நம்மூரில் குழந்தை பிறந்து ஒரு 3-5 மாதங்கள் நம்மிடம் கொடுக்க கூட மாட்டார்கள். கேட்டால், உர விழுந்துடும், கழுத்து நிக்கல பார்த்து புடி அப்படி இப்படின்னு, ஆனால் அங்கு பிறந்து ஒன்றிரண்டு நாள் குழந்தைகளை நெஞ்சில் தொட்டி மாதிரி (முண்டா பனியன் மாதிரி) ஒரு பையை மாட்டிக்கொண்டு அதற்குள் குழந்தையை உட்கார்ந்த வாக்கில் வைத்துக்கொண்டு வேக வேகமாக நடப்பார்கள். அந்த குழந்தையின் கழுத்து பெரும்பாலும் கீழே தொங்கியபடி தான் இருக்கும்.

அதே போல் கைகுழந்தையை கூட குழந்தையின் ஒரு கையை பிடித்து தூக்கி பார்த்திருக்கிறேன். அப்போதும் குழந்தையின் கழுத்து கீழே தொங்கியபடி தான் இருக்கும். ஏன் அந்த ஊர் குழந்தைகளுக்கு மட்டும் கழுத்தில் உரம் விழ வில்லை?

அதே போல் நான் கவனித்த இன்னோர் விஷயம் குழந்தைகளுக்கு ஊசி போடுவது. கைகுழந்தைகளை கூட அங்கு உட்கார வைக்கிறார்கள். உட்கார வைத்து ஏதோ மாட்டுக்கு குத்துவது போல் ஊசி குத்துகிறார்கள் சாரி போடுகிறார்கள். 


இரண்டாவது, மாசமாக இருக்கும் பெண்கள். மூன்று மாதங்கள் என்று தெரிந்தாலே இங்கு அப்படி நடமா, இப்படி உட்காரும்மா என்று மாசமாக இருக்கும் பெண்களுக்கு பயங்கர அட்வைஸ் செய்து கேட்டிருக்கிறேன். ஆனால் அங்கு ஒருவர் மாசமாக இருப்பது அவரின் வயிற்றை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும். மற்றபடி மற்றவர்களை விட அவர்கள் மிகவும் வேகமாக நடப்பதும், எப்போதும் போல் வண்டி ஓட்டுவதும் அவர்களின் செயல்களை பார்த்தால் நமக்கு பயமாக இருக்கும்.

அதே போல் பிரசவத்திற்கு முதல் நாள் அல்லது அந்த நிமிஷம் வரை வேலைக்கு செல்வார்கள் (ஆனால் எந்த நிமிடமும் அவசர உதவி 911 அவர்களுக்கு கிடைக்கும் என்பது வேறு). இதற்க்கு வேறு ஒரு காரணமும் உண்டு. நம்மூர் போல் மருத்துவமனையில் போய் தேவை இன்றி நாமும் படுத்துக்கொள்ள முடியாது. மருத்துவமனைகளும் அதற்க்கு  அனுமதிக்காது. பெரும்பாலும் மருத்துவ காப்பீடு மூலமே அங்கு சிகிற்சைகள் மேற்கொள்ள படுவதுதான் அதற்க்கு காரணம். இல்லை என்றால் பிறகு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பதில் சொல்ல நேரிடும்.

பிரசவத்தின் போது கணவர் உடன் இருப்பதும், குழந்தை பிறந்தவுடன் அதை புகைப்படம் எடுத்து வெளியிடுவதும் அங்கு வழக்கம். இன்னொரு விசித்திரமான நடைமுறை/சட்டம் அங்கு உண்டு. பிரசவத்திற்கு பிறகு மனைவி குழந்தையை வீட்டுக்கு அழைத்து செல்லும் முன் உங்கள் காரில் குழந்தையை வைத்து எடுத்து செல்வதற்கான பேபி சீட் பொருத்தப்பட்டுள்ளதா அது குழந்தையின் எடையை தாங்குமா என பரிசோதித்த பின்னே அவர்களை டிஸ்சார்ஜ் செய்வார்கள்.

'ஆ'மெரிக்க கதைகள் தொடரும்....


share on:facebook